தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததன் பேரில் உற்பத்தி தொடங்கியது
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்து, கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு குழுவினர் ஆலையில் ஆய்வு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. இந்த நிலையில் ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
நேற்று இரவில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி அளவில் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படும் என்று ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை 7 மணி அளவில் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆக்ஸிஜன் விநியோகம் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.