தமிழகத்தில் ஒமிக்ரான்? நைஜீரியாவில் இருந்து வந்த 7 பேருக்கு தொற்று

சென்னை வந்த நைஜீரிய குடும்பத்தினர் 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பா என்பது பரிசோதனையில் தெரிய வரும்.;

Update: 2021-12-14 09:30 GMT

அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில்,  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை,  தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை மற்றும் விமான நிலையத்தில் அதிகாரிகள் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உருமாறிய கொரோனா தொற்று,  உலக அளவில் பெரிய அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்,  இன்று காலையில் வரை 41 பேருக்கு ஒமிக்ரான் புதிய வகை தொற்று வந்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு மேலாக அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதிக பாதிப்பு உள்ள 12 நாடுகளில் இருந்து, முழுமையாக அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றால்,  7 நாள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அதிக பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2 சதவீதம் பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் மருத்துவமனைக்கும் தொற்று இல்லாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வந்த 11, 480 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வந்த 58, 745 பயணிகளில் 1690 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை செய்ததில் 37 பேருக்கு பாதிப்பு இருந்தது. 4 பேருக்கு பெங்களூரில் இருந்து மரபணு சோதனையில் கொரோனா வைரஸ் என முடிவு வந்து உள்ளது. தற்போது 33 பேர் மருத்துவமனையில் உள்ளனர். கடந்த 3 நாளுக்கு முன் நைஜீரியா என்ற பாதிப்பு இல்லாத நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் பாதிப்பு தொடக்க நிலையில் இருப்பதாக சந்தேகப்படுகிறது.

அவருடைய குடும்பத்தினரில் 6 பேருக்கும் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். முதல்நிலை நோயாளிகளாக உள்ளனர். பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 7 பேரின் மாதிரிகளுடன் 33 பேரின் மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்.

ஒமிக்ரான் தொற்று என சந்தேகமாக இருப்பதால்,  விரைந்து முடிவு அனுப்பக் கோரியுள்ளோம். நாளைக்குள் முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். ஒமிக்ரான் தொற்றின் முதற்கட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முடிவு வந்ததும் தெரியவரும். அதிக பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களை பன்னாட்டு முனையத்தில் காய்ச்சல் கண்காணிக்கும் கருவிகள் முலமாக ஆய்வு செய்யப்படுகிறோம். அதில் சந்தேகம் கொள்பவர்களில் 2 சதவீதம் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரம் பேருக்கு, டெல்டா தாக்கம் இருக்கிறது. தமிழகத்தில்தான் தினமும் 1 லட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கப்படுகிறது. அதுபோல், அண்டை மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக வருபவர்களை கண்காணிக்க, நடவடிக்கை  தீவிரப்படுத்தப்படும். கோவையில் உள்ள ஒரு ஆசிமரத்தில் ஒருவருக்கு டெல்டா தொற்று இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டது.

திருச்சி மணப்பாறையில் ஆக்சிஜன் தொட்டி திறந்து வைக்கப்பட்டு உள்ளது. 50 வயதுக்கு மேல் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு புற்று நோய் பரிசோதனை செய்யப்படும். இந்திய மருத்துவக்கவுன்சில் தரும் பரிந்துரையின் பேரில் சோதனைகள் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஒமிக்ரான் குறித்து  யாரும் பதட்டம் கொள்ள தேவையில்லை. தடுப்பூசி போட்டு கொள்வது,  முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம். பரிசோதனை செய்து தொற்று இருந்தால்,  சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்ட பின்னரும் தொற்று இருப்பதாக தெரியவந்து உள்ளது என்றார்.

Tags:    

Similar News