பணம் திரும்ப கிடைத்தது: தண்டனை எப்போ கிடைக்கும்?
போலீஸ் ஸ்டேஷனில் வைத்து லஞ்சம், முறைகேடு பணத்தை அதிகாரிகள் திரும்ப கொடுத்து விட்டனர்.;
இதுகுறித்து தேனி மாவட்டம் கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு கூறியதாவது:
கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் போது அதிகாரிகள் 45 கிலோ மூடையினை 40 கிலோ என எடை போட்டு ஒவ்வொரு மூட்டைக்கும் 5 கிலோ நெல் கூடுதலாக எடுத்தனர். அதேபோல் நெல்லுக்கான பணத்தை பட்டுவாடா செய்யும் போது, குறிப்பிட்ட அளவு பணத்தை பிடித்தம் செய்தனர். கூடலுாரில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் விளைச்சல் நடக்கிறது.
ஒரு ஏக்கருக்கு 60 கிலோ எடை கொண்ட 50 முதல் 55 மூடைகள் அறுவடை செய்யப்படுகின்றன. அதாவது சராசரியாக ஒரு ஏக்கருக்கு 3300 கிலோ நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது 40 கிலோ எடை கொண்ட 82.5 மூடைகள் நெல் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மூடைக்கு 5 கிலோ எடுத்தால், ஒரு ஏக்கருக்கு 412 கிலோ நெல் கூடுதலாக கணக்கில் காட்டாமல் எடை போடுகின்றனர். அப்படியானால் 2 ஆயிரம் ஏக்கருக்கு எவ்வளவு என்பதை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோ நெல் 21 ரூபாய் 60 காசு. ஆக ஒரு ஏக்கருக்கு அதிகாரிகள் 9 ஆயிரம் ரூபாய் நெல்லை முறைகேடு மூலம் கணக்கில் வராமல் அளவீடு செய்துள்ளனர்.
2 ஆயிரம் ஏக்கருக்கு எத்தனை லட்சம் ரூபாய் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த முறைகேடு நடந்து வருகிறது. இதில் நெல் கொள்முதல் நிலைய உயர் அதிகாரிகளுக்கும் பங்கு போகிறது. எல்லோரும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பதை பற்றி பேசுகின்றனர். குடிமகன் தெரிந்தே கொடுக்கிறான். அதைப்பற்றி அரசியல் கட்சிகள் பெரிதாக பேசுகின்றன. விவசாயிகளிடம் அதிகாரிகள் இப்படி அடித்து பிடுங்குதை பற்றி எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்கவில்லை. காரணம் அவர்களும் விவசாயிகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
இந்த முறைகேட்டை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்திய பின்னர் 9 விவசாயிகளுக்கு மட்டும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய பணத்தை கையில் திரும்ப கொடுத்தனர். முறைகேடாக நெல் அளவிட்டதில் கிடைத்த பணம் 3 லட்சத்து 50 ஆயிரத்தை அவரவர் வங்கி கணக்கில் ஏற்றி விட்டனர். இதற்கு தற்காலிக பணியாளர்கள் 3 பேர் தான் காரணம் என அவர்களை சஸ்பெண்ட் செய்து விட்டனர். அதுவும் ஆனால் பலநுாறு விவசாயிகளிடம் இப்படி முறைகேடாக நெல் கொள்முதல் நடந்துள்ளது. லஞ்சம் வாங்கி உள்ளனர். 9 பேருக்கு மட்டும் திரும்ப வந்துள்ளது. மற்றவர்களுக்கு எப்போது திரும்ப கிடைக்கும்.
அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இன்ஸ்பெக்டர் முன்னிலையில் லஞ்சமாக வாங்கிய பணம் என ஒப்புக் கொண்டு திரும்ப கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்பது தான் உச்சகட்ட வருத்தம் தரும் விஷயம். அப்படியானால் போலீசார் உட்பட அத்தனை பேரும் லஞ்சத்தை அங்கீகரிக்கிறார்களா. லஞ்சம் வாங்கினேன் என ஒப்புக் கொண்டு பணத்தை திரும்ப தந்த பின்னரும் அவர்கள் மீது ஏன் லஞ்சம் வாங்கினீர்கள் என கேள்வி கேட்டு வழக்கு பதியவில்லை. கூடலுாரி்ல் 9 விவசாயிகளிடம் மட்டும் இவ்வளவு முறைகேடு என்றால், தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும். இதனை முதல்வரும், இத்தனை கலெக்டர்களும், உயர் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கும் காரணமும் புரியவில்லை. பிற அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணமும் புரியவில்லை.
தமிழகம் முழுவதும் நெல் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே குடிமகன்களுக்காக பரிதாபப்படும் அரசியல் கட்சிகளின் பார்வை கூட விவசாயிகள் மீது விழும் என நினைக்கிறோம். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்போகிறோம். முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என அவரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு கூறினர்.