புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி. சிறுத்தைக்குட்டி பலியானது தொடர்பாக புதிய ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார்.
அ.தி.மு.க.வின் ஒரு அணி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி., இவர்களுக்கு சொந்தமாக தேனி மாவட்டத்தில் பல இடங்களில் நிலங்கள் உள்ளன.
ரவீந்திரநாத் எம்.பி. மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடக்குமலை காப்புக்காட்டில் நிலங்கள் உள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக இந்த நிலங்களை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். ரவீந்திரநாத் எம்.பியின் தோட்ட மேலாளரான தேனி பூதிப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(வயது 35 )என்பவர், இங்கு ஆட்டுக்கிடை அமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி காலை பெண்சிறுத்தை ஒன்று இங்குள்ள மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடியது. உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், ரேஞ்சர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் இந்த சிறுத்தையை மீட்டனர். அதற்கு மறுநாளே 2 வயதான ஆண் சிறுத்தைக் குட்டி இந்த மின்வேலியில் கம்பி சுற்றி, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது.
சம்பவம் தொடர்பாக ஆட்டுக்கிடை போட்டிருந்த அலெக்ஸ்பாண்டியனை, வனத்துறையினர் கைது செய்து ரிமாண்ட் செய்தனர். ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், 'சிறுத்தைக் குட்டி இறந்தது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்கள் ரவீந்திரநாத் எம்.பி., (ஓ.பி.எஸ். மகன்) மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பின்னரே இந்த விஷயத்தில் முழு உண்மை தெரியவரும்' என்றார்.
இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி சிறுத்தை,புலி, சிங்கம், யானை, மான் மற்றும் வனவிலங்குகள் தேசிய பறவையான மயில் ஆகியவற்றை கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சூழலில் தான் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.க்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தைக் குட்டி ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை அவர்கள் வேட்டையாடினார்களா அல்லது உண்மையிலேயே மின்வேலியில் சிக்கித் தான் இறந்ததா என்பது வனத்துறை அதிகாரிகளின் முழு விசாரணைக்கு பின்னர்தான் தெரிய வரும். மின்வேலியில் சிக்கி இறந்திருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் தான் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த குற்றச்சாட்டு அதாவது ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார். இதில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு ஆறு மாதம் முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மும்பையில் இதே போல் பிரபல திரைப்பட நடிகர் சல்மான் கான் மற்றும் உடன் சென்ற பிரபல நடிகை உள்ளிட்டோர் மான் வேட்டையாடியதாக வனத்துறையினால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு சிக்கலில் மாட்டினார்கள்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ .பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போராட்டம் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் தொடங்கி, இப்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவில் இந்த வழக்கு முடியும் வரை எடப்பாடி பழனிசாமி தனியாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என தீர்ப்பளித்தது. ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு ஓ. பன்னீர்செல்வத்திற்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் தான் தற்போது அவரது மகன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.