புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி புதிய லே-அவுட் அனுமதியை நிறுத்த கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-10 07:26 GMT

கோப்பு படம்


நெல்லையைச் சேர்ந்த எஸ்.சகிலாபானு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நெல்லையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வீட்டுமனை லே அவுட்டுக்கு நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட இயக்குநர் 24.1.2024-ல் அனுமதி வழங்கினார். புதிய லே அவுட்டுகளுக்கு நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெற்ற பிறகு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி நெல்லை மாநகராட்சிக்கு அனுமதி கோரி 1.2.2024-ல் விணணப்பித்தேன். இதுவரை அனுமதி தரவில்லை. எனவே புதிய வீட்டுமனை லே அவுட்டுக்கு அனுமதி வழங்க நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. நெல்லை மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மனுதாரரின் விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதி, தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால் மனுதாரரின் விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. அது ஒரு காரணம் அல்ல. ஏதோ ஒரு காரணம் கூற வேண்டும் என்பதற்காக கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 2-வது வாரத்தில் அமலுக்கு வந்தது. மனுதாரர் பிப்ரவரி மாதமே விண்ணப்பித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் வழக்கமான பணிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் சம்பந்தம் இல்லை. வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிர்வாக முடிவு மற்றும் அலுவல் முடிவுகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும். இந்த வழக்குக்கும் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் தொடர்பில்லை. எனவே மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து 6 வாரங்களில் புதிய லே அவுட்டுக்கு மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News