குன்னூரில் வீட்டினுள் விழுந்த காட்டெருமை மீட்பு: பொருட்கள் சேதம்
குன்னூரில், வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை, 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்டு, வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில், அண்மைக்காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவுகளை தேடி காட்டெருமைகள் பொதுமக்கள் மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில், குட்டியுடன் சுற்றி திரிந்த காட்டெருமை ஒன்று, நிலை தடுமாறி தன்ராஜ் என்பவரது வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு, உள்ளே விழுந்தது. அத்துடன், வீட்டில் உள்ள உபயோகப் பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதப்படுத்தியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், வனச்சரகர் சசிக்குமார் உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து காட்டெருமையை ஐந்து மணி நேரத்திற்கு பின்னர், பத்திரமாக மீட்டு, குட்டியுடன் வனப்பகுதிக்கு விரட்டினர்.
மேலும் சேதமடைந்த வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று வனத்துறையினருக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.