பழங்குடியின இசைக்கலைஞர் அடித்து கொலை
கோத்தகிரியில் பழங்குடியின இசைக்கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
நீலகிரி மாவட்டம் ,கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, மந்தரை கிராமத்தை சேர்ந்தவர் மணி (68). இவர் ஆதிவாசி இருளர் இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மசனி (62) என்ற மனைவியும், மணியன் (30), சின்ராசு (26) என்ற 2 மகன்களும், லட்சுமி (35) என்கிற ஒரு மகளும் உள்ளனர்.இவர் அப்பகுதியை சேர்ந்த குழுவினருடன், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று, அங்கு பழங்குடியினர் இசை நிகழ்ச்சி நடத்தி, அதற்கான தொகையை பெற்று குழுவினருக்கு பிரித்து கொடுப்பது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மணி நேற்று அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் அரவேனு பகுதிக்கு சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடத்தி விட்டு, மாலை தனது குழுவினருடன் வீடு திரும்பியுள்ளார். செல்லும் வழியில் சம்பள தொகையை பிரிப்பதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து நாளை (இன்று) பேசிக்கொள்ளலாம் என கூறிவிட்டு அவர்கள், தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.பின்னர் மணி, மந்தரை ஆற்று பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அடர்ந்த காபி தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்தவர்கள் அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் மணி சடலத்தை அங்கிருந்த ஒரு மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இசை நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்ற மணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது வீட்டார் அவரை பல இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் மணி பிணமாக தொங்கி கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார், இறந்து கிடந்த மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, அவருடன் குழுவாக இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் தலைமறைவாக உள்ள ஒருவரது செல்போன் எண்ணை வைத்து, அவரது இருப்பிடத்தை கண்டு பிடிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.