குன்னூரில் காலில் காயத்துடன் திரிந்த காட்டெருமைக்கு சிகிச்சை
கிரேன் உதவியுடன் காட்டெருமையை தூக்கி லாரி மூலம் சிம்ஸ்பார்க் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவ்வப்போது அவற்றிற்குள் சண்டை ஏற்பட்டு காயங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் குன்னூரில் காலில் அடிபட்ட நிலையில் காட்டெருமை ஒன்று சில நாட்களாக சுற்றி திரிந்து வந்தது.
இன்று அரசு போக்குவரத்துக் கழக பனிமனை பகுதியில் நடக்க முடியாமல் படுத்துவிட்டது. இது குறித்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவரை வரவழைத்து மயக்க மருந்து செலுத்தினர்.
பின்னர் கிரேன் உதவியுடன் காட்டெருமையை தூக்கி லாரி மூலம் சிம்ஸ்பார்க் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து காட்டெருமைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் குன்னூர் கோத்தகிரி சாலையில் இரண்டு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.