நீலகிரி மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்தது அதிமுக அரசு : முதல்வர் பழனிச்சாமி

திமுக ஆட்சியில் இருண்ட தமிழகம் தற்போது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது முதலமைச்சர் பேச்சு .;

Update: 2021-04-01 11:32 GMT

உதகை மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குன்னூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஊட்டி, குன்னூர், கூடலூர், உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

வாகன பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,  நீலகிரி மாவட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்தமான மாவட்டமாகும். எண்ணற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை நீலகிரி மாவட்டத்திற்கு அதிமுக அரசு செய்துள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் உயர் சிகிச்சைக்காக சமவெளிப் பகுதிகளுக்கு சென்று வந்த மாவட்ட மக்களுக்கு 447 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். அதை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அதிமுக அரசாகும்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்காக உயர்கல்வி படிப்பிற்கு மடிக்கணினி வழங்கி கல்வித் தரத்தை உயர்த்தி உள்ளது இந்த அரசு. திமுகவின் குடும்ப அரசியலை தூக்கி எறியும் நேரம் நெருங்கி விட்டது அப்பா, மகன், மகள், பேரன், உள்ளிட்டோருக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகளை வழங்கி பல ஆண்டுகளாக உள்ள திமுக தொண்டர்களுக்கு எந்த ஒரு பதவியும் வழங்காமல் சாதனை படைத்து வரும் கட்சி திமுக.

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட அரியாசனம் ஏறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அதிமுகவின் கொள்கை ஆகும். தற்போது தேர்தல் பரப்புரைகளில் அதிமுக வை பற்றி ஸ்டாலின் கூறும் அனைத்தும் அப்பட்டமான பொய்கள் அது மக்களாகிய உங்களுக்கு தெரியும். அதேபோல் தாய்மார்களை இழிவாக பேசுவது திமுகவின் மாறாத கொள்கையாக உள்ளது பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

எனவே இத்தேர்தலில் மக்களுக்கான திட்டங்களை சரியான முறையில் சென்றடைய அனைவரும் அதிமுக, பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேற்றைய தினம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிச்சயமாக ஐடி பூங்கா அமைக்கப்படும் என கூறினார்.

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான நிரந்தர ஊதியம் வழங்கப்படும் எனவும், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரப்படும் என தனது உரையை முடித்தார்.

Tags:    

Similar News