தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சட்டமன்றத்தை ஒத்திவைத்த கவர்னர் விவகாரம் புரிதல் இல்லாமல் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 11 பேருராட்சிகளில் பாஜக சார்பாக போட்டியிடும் 116 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் குன்னூர் வி.பி தெருவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஹிஜாப் விவகாரத்தில் பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம். ஆனால் பள்ளி கல்லூரிகளில் எந்த மதமாக இருந்தாலும் கட்டாயம் அந்த சீருடை மட்டுமே அணிய வேண்டும். மேலும் மதத்தை வைத்து பாஜக, ஒருபோதும் அரசியல் செய்யாது. இஸ்லாமியர்களாகட்டும், கிறிஸ்தவர்களாட்டும் யாராக இருந்தாலும் அருகில் வைத்து கொள்வோம்.
மேற்கு வங்க கவர்னர் சட்டமன்றத்தை ஒத்திவைத்த விவகாரத்தை எதிர்த்து தமிழக முதல்வர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் கவர்னர் இரக்கமில்லாமல் தவறு செய்வதாகவும், மாநில அரசியலில் தலையீடு செய்வதாகவும் முதல்வர் குற்றம் சாட்டி இருந்தார். மாநில அரசும், மினிஸ்ட்ரி ஆப் கவுன்சில் எடுக்கும் முடிவையே கவர்னர் எடுத்துள்ளார் என்ற புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு தமிழக முதல்வர் ஏன் டுவிட்டரில் பதிவிட வேண்டும். இதுபோன்று மத்திய அரசை வம்புக்கு இழுக்கும் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக தெரியவில்லை. இதற்காக தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.