கோத்தகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை அடுத்து, ஆசிரியரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி டானிங்டன் பகுதியை சேர்ந்த முரளீதரன், 46. இவர், கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களாக, பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட, 12 மாணவியர் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, குன்னூர் டி.எஸ்.பி., சுரேஷ் மற்றும் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை அடுத்து, 'போக்சோ' சட்டத்தில் வழக்குபதிவு செய்த போலீசார், முரளீதரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.