நீலகிரியில் பெய்து வரும் கனமழை: நிரம்பும் நீர்நிலைகள்
நீலகிரியில் பெய்யும் கன மழையால் குந்தா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது; அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது;
நீலகிரியில் இரு வாரங்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல், பலத்த காற்றுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. ஊட்டி, குந்தா உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
இன்று, காலை, 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சி, 116 மி.மீ., மழை பதிவானது, பெரும்பாலான இடங்களில், 20 மி.மீ., அதிகமாக மழை பதிவானது. சராசரி மழை அளவு, 27. 61 மி.மீ., பதிவானது. இந்த மழைக்கு குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள அப்பர் பவானி, கோர குந்தா, அவலாஞ்சி, காட்டு குப்பை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளின் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக, குந்தா அணைக்கு வினாடிக்கு, 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படும் என, மின்வாரியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.