நீலகிரியில் மக்களை தேடி மருத்துவ சேவையை துவக்கி வைத்தவனத்துறை அமைச்சர்
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டதுடன், மக்களை தேடி மருத்துவ வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை அண்மையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கு முறையான மருத்துவ வசதி இல்லாத நிலையில் அவர்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று சிகிச்சை பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக மக்களின் பயன்பாட்டிற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கான மருத்துவப் பெட்டகம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது ரத்த அழுத்த அளவையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு நோய் உள்ள நோயாளிகள் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதன் பின் பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டதுடன் மக்களை தேடி மருத்துவ வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் லீமா கெட்சி, இணை இயக்குனர் பாலுசாமி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா உட்பட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.