குன்னூர் வியாபாரிகளுடன் வனத்துறை அமைச்சர் ஆலோசனை

குன்னூரில், கடை வாடகை உயர்வு குறித்து, வியாபாரிகளுடன், வனத்துறை அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-17 12:48 GMT

தமிழகம் முழுவதும், உள்ளாட்சி கடைகள் சுமார் இரண்டு லட்சம் என்றளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் ஒரு லட்சம் கடைகள்,  அந்தந்த உள்ளாட்சி கொண்டு,  2016ஆம் ஆண்டு வாடகை மதிப்பு உயர்த்தப்பட்ட நிலையில்,  தற்போது வியாபாரிகள் அந்த வாடகையை செலுத்தி வருகின்றனர்.

மீதமுள்ள சுமார் ஒரு லட்சம் கடைகளில், உள்ளாட்சி நிர்வாகமே வாடகையை கடுமையாக 300% முதல் 500% வரை உயர்த்தியதால் 2016 ஆம் ஆண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகளிலும் வாடகை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வாடகை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரனை சந்தித்து, அனைத்து வியாபாரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன், இன்று குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

இதில் வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்த வனத்துறை அமைச்சர், இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பின், வியாபாரிகளுக்கு சாதகமான முடிவை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News