கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்
கோத்தகிரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் அதிகமானோர் பங்கேற்றதால் திருமண மண்டபத்திற்கு 10,000 அபராதம் விதிக்கப்பட்டது
கொரோனா பரவல் காரணமாக தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரி தாலுக்காவிற்குட்பட்ட ஜெகதளா ஒசட்டி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இடைவெளியை கடைபிடிக்காமல் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்து கோத்தகிரி தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்,கிராம உதவியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட போது விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், அதிக பொதுமக்கள் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மண்டப உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து இது போல் சுபநிகழ்ச்சிகளில் கொரானா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.