நடைபாதை அகற்றம்: மக்கள் அவதி - தேர்தலை புறக்கணிக்க முடிவு!
52 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை இராணுவத்தினர் அகற்றியதால் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு .
குன்னூர் அருகேயுள்ள மலையப்பன் காட்டேஜ் பகுதியில் 52 ஆண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்திய நடைபாதையை இராணுவ அதிகாரிகள் திடீரென்று இடித்ததை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள சின்ன வண்டிச்சோலை மற்றும் மலையப்பன் காட்டேஜ் போன்ற பகுதிகளில் ஏராளமானோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அங்குள்ள பிரதான நடைபாதையை கடந்த 52 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தனர். சேறும் சகதியுமான அந்த சாலையை அண்மையில் கண்டோன்மென்ட் நிர்வாகத்தின் சார்பில் சிமெண்ட் சாலையாக அமைத்து கொடுத்தனர்.
இராணுவ அதிகாரிகள் உத்தரவால் திடீரென்று எந்தவொரு முன்னறிவிப்புமின்றி பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய நடைபாதையை இடித்து, நடந்து செல்லக்கூடாது என்பதற்காக இராணுவ வீரர்கள் அதனை அடைத்தனர்.
இதனால் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் நியாயவிலை கடைக்கு செல்லும் அப்பகுதி கிராம மக்கள் 3 கிலோமீட்டர் சுற்றி, நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கண்டோன்மென்ட் நிர்வாகத்தினரிடம் மனு அளித்தனர். எனினும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.