உதகை மேட்டுபாளையம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
உதகை சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்.
குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த தர்மராஜ் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காரில் பெங்களூர் சென்றுவிட்டு மலைப்பாதை வழியாக குன்னூர் திரும்பியுள்ளார். கார் மரப்பாலம் அருகில் வந்துக்கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது.
உடனடியாக தர்மராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை இருபுறமும் நிறுத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் பயண்படுத்தி 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குன்னூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.