குன்னூரில் விதிகளை மீறி மண் மற்றும் பாறைகள் உடைப்பு

குன்னூரில் தொடர்ந்து விதி மீறி மண் மற்றும் பாறைகள் உடைப்பதால் அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது.

Update: 2021-08-31 12:33 GMT

பொக்லைன் மூலம் மண் அகற்றப்படும் காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுபாடுகள் அரசு சார்பாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தவும், பாறைகள் உடைப்பதற்கும், ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலை சரிவு, நிலச்சரிவு, நீரோடை மற்றும் செங்குத்தான பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறி குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் கடந்த ஒருமாத காலமாக அதிமுக நிர்வாகியின் இடத்தில் மண் அகற்றும் பணியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தது.

இங்கு திடீரென்று ஒரு பகுதியில் மண் சரிந்து விழுந்ததால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மண்ணில் சிக்கி கொண்டனர். அப்போது சக தொழிலாளர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்துவதற்கு இவர்களுக்கு மட்டும் யார் அனுமதி அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இதே இடத்தில் அதிமுக நிர்வாகி மண் அகற்றியதால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய சாலை இடிந்து விழுந்தது. இதனால் பாதை மூடப்பட்டு பொது மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மண் மற்றும் பாறைகள் உடைப்பதால் பெறும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் அரசு லாலி மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆக்ஸிஜன் யூனிட் மற்றும் அருகே உள்ள குடியிருப்புகள் தற்போது அந்தரத்தில் தொங்கி வருகின்றது. அதிகாரிகளின் உடந்தையுடன் அதிமுக நிர்வாகி மண் மற்றும் பாறைகளை உடைத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் வழக்கம் போல அங்கு மண் மற்றும் பாறைகள் உடைத்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மண் அகற்றுவது குறித்து காவல்துறையினரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News