கோத்தகிரி: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த கரடி பத்திரமாக மீட்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடி வெளியேற ஏதுவாக, ஏணி வைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதிகளில் இருந்து, வன விலங்குகள் சர்வ சாதாரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள அகனாடு தேயிலை எஸ்டேட் பகுதியில், உணவைத்தேடி வந்த கரடி ஒன்று, நேற்று நள்ளிரவு அப்பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியினுள் தவறி விழுந்துள்ளது.
இரவு நேரம் என்பதால், ஆட்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக இருந்தது. இன்று காலையில் தண்ணீர் தொட்டியினுள் இருந்து கரடியின் அலறல் சத்தம் கேட்டு, தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள், அருகில் சென்று பார்த்தனர். அப்போது தொட்டிக்குள் கரடி இருப்பதை கண்டு, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் விழுந்த கரடியை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக பல்வேறு முயற்சிகள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியாக ஏணி ஒன்று கொண்டு வந்து தொட்டிக்குள் இறக்கி, வனத்துறையினர் ஆரவாரம் இன்றி ஒதுங்கி நின்றனர். பிறகு அந்த கரடி தொட்டிக்குள் இருந்து மெதுவாக ஏணியில் ஏறி வெளியே வர தொடங்கியது, சுமார் 3 மணிநேர போரட்டத்திற்கு பின், கிணற்றின் மேல் பகுதிக்கு வந்த கரடி, அருகில் இருந்த முற்புதருக்குள் சென்று மறைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.