ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு
நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்கள் ஒரு ஆண்டுக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற அனுமதி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த எட்டாம் தேதி காலை 12.30 மணியளவில் கோவையிலிருந்து முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடுமையான மேகமூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
அப்போது விபத்தில் சிக்கி தீயில் கருகிய முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 ராணுவ வீரர்களை மீட்பதற்காக நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பிற்பகல் நஞ்சப்பன் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்ற தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண், ஹெலிகாப்டர் விபத்தில் உதவி மேற்கொண்டு நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்களுக்கு இரு கைகளை வணங்கி தனது நன்றியினை தெரிவித்தார்.
இதன்பின் நஞ்சப்பன் சித்திரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவிகளை வழங்கிய லெப்.ஜெனரல் ஏ.அருண் நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உதவி மேற்கொண்ட கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். மாதம் தோறும் நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் இலவசமாக ராணுவ மருத்துவர்களைக் கொண்டு ஒரு ஆண்டிற்கு மருத்துவ முகாம் நடைபெறும் என்றார்.
முன்னதாக பேட்டி அளித்த லெப்.ஜெனரல் ஏ.அருள், ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார்.