போலியான ஆவணங்களை தயாரித்து நகைகள் கையாடல் -2 பேர் கைது, 2 பேர் தலைமறைவு
போலியான ஆவணங்களை உருவாக்கி அவர்களது கையொப்பம் இட்டு 46 கணக்குகளில் தங்க நகைகளை வைத்து பணம் எடுத்துள்ளனர்;
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் சிலரது கணக்குகளில் நகை மோசடி குறித்து புகார் வந்தது. நீலகிரி மாவட்ட பகுதி நிறுவன மேலாளர் வாதி ரவி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினர்.
மஞ்சூர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த சாந்திபிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜு, கணக்காளர் நந்தினி (வயது 27), கணினி ஆப்ரேட்டர் விஜயகுமார் (29) ஆகிய 4 பேர் சேர்ந்து கடந்த 9.3 2021-ந் தேதி முதல் 1.9.2021-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் 81 பேர் அடகு வைத்த தங்க நகைகளை நிறுவனத்தில் இருந்து எடுத்து விட்டு, சம்பந்தப்பட்ட 81 பேரின் நகை பாக்கெட்டுகளில் போலி நகைகளை வைத்தனர்.
மேலும் 43 பேரின் நகைகளை வேறு வாடிக்கையாளர்களின் பெயர்களில், வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் போலியான ஆவணங்களை உருவாக்கி அவர்களது கையொப்பம் இட்டு 46 கணக்குகளில் தங்க நகைகளை வைத்து பணம் எடுத்து உள்ளனர்.
மீதமுள்ள 38 பேரின் தங்க நகைகளை 4 பேரும் எடுத்து பயன்படுத்தி முறையற்ற லாபம் அடைந்தது தெரியவந்தது. ரூ.98 லட்சத்து 30 ஆயிரத்து 103 ரூபாய் மோசடி செய்தனர். போலீசார் நந்தினி, விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாந்திபிரியா, ராஜு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.