கோத்தகிரியில் திருட்டு வழக்கில் கைதாகி,ஜாமீனில் வெளியே வந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் , பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (42). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கோயிலுக்குள் புகுந்து பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்து கோத்தகிரிக்கு அழைத்து வந்தனர்.பின்னர் அவர் குன்னூர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.