கோவை தடாகத்தில் இருந்து செங்கல்களை எடுத்துச் செல்ல பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி

கோவை தடாகம் பகுதியில் மூடப்பட்ட செங்கல்சூளைகளில் இருந்து செங்கல்களை எடுத்து செல்ல தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.;

Update: 2023-03-14 14:04 GMT

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம். (கோப்பு படம்).

கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கில், யானைகளின் வழித்தடப் பகுதியில் சட்டவிரோதமாக செங்கல்சூளைகள் செயல்பட்டு வருவதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. மேலும், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல்சூளைகளை மூடவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரை கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செங்கல்சூளை உரிமையாளர்கள் தரப்பில், கனிம வளத்துறை விதித்துள்ள அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், முழுமையாக தயாரிக்கப்பட்டு உள்ள செங்கல்களை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், ஆயிரத்து 130 கோடி செங்கல்கள் தயாரிக்கப்பட்டு செங்கல்சூளைகளில் இருக்கின்றன என்றும், செங்கல் தயாரிப்பதற்காக 3 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பில் தோண்டப்பட்டுள்ள குழிகளை நிரப்பாமல் அந்த செங்கல்களை எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், கனிம வளத்துறை பிறப்பித்த உத்தரவின் படி செலுத்த வேண்டிய அபராதத் தொகையை முழுமையாக செலுத்திவிட்டு, ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டு உள்ள செங்கல்களை எடுத்து செல்லலாம் என செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், செங்கற்களை தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஏப்ரல் 17 ஆம் தேதி தாக்கல் செய்ய தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News