நாமக்கல் மாநகராட்சி சொத்து வரி வசூலில் சாதனை
நாமக்கல் மாநகராட்சி சொத்து வரி வசூல் சாதனை, மேயர், கமிஷனர், பணியாளர்கள் பாராட்டப்பட்டனர்;
நாமக்கல் மாநகராட்சி வரி வசூலில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்ததையடுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 2023 ஆகஸ்ட் 12ல் நாமக்கல் நகராட்சியுடன் 12 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல் மாநகராட்சியில் தற்போது 58,795 சொத்துவரி விதிப்புகள் உள்ளன. 2024-25ம் நிதியாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள 24 மாநகராட்சிகளில் 22ம் இடத்தில் இருந்த நாமக்கல் மாநகராட்சி, படிப்படியாக முன்னேற்றம் அடைந்து 2024 நவம்பர் முதல் நடப்பு நிதியாண்டின் இறுதி வரை சொத்து வரி வசூலில் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. 15வது மத்திய நிதிக்குழு மானிய தொகையை விடுவிக்க இந்த மாநகராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட 14.74 கோடி ரூபாய் சொத்துவரி வசூல் இலக்கை கடந்த நவம்பர் மாதமே அடைந்து, நடப்பாண்டிற்கான மத்திய நிதிக்குழு மானியத்தொகை பெற தகுதியான மாநகராட்சியாக உள்ளது. சொத்துவரி தவிர்த்து, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களில், குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, திடக்கழிவு சேவை கட்டணம் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கான மொத்த வசூலிலும் 2024-25ல் நாமக்கல் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கலாநிதி தலைமையில், துணை மேயர் பூபதி மற்றும் கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்று, வசூலில் சாதனை படைக்க உறுதுணையாக இருந்த மேயர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.