'தவறாம ஓட்டு போடுங்க ' விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2021-03-09 05:57 GMT

நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு, தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி என பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை நாமக்கல் ஆர்.டி.ஓ . கோட்டைக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் "அனைவரும் வாக்களிக்க வேண்டும், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யவேண்டும், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் நகரின் முக்கிய சாலைகளில் பேரணியாக சென்றனர். 

Tags:    

Similar News