பரமத்தி வேலூர் அருகே கண்ணாடி கடையில் தீ விபத்து!
பரமத்தி வேலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள கண் கண்ணாடி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் : பரமத்தி வேலூர், திருவள்ளுவர் சாலையில் கண் கண்ணாடி நடத்தி வருபவர் நாகரத்தினம். இந்தக் கடையில் கண் பரிசோதனை மையமும் செயல்பட்டு வந்தது.
கடையிலிருந்து கரும்புகை
நாகரத்தினம் புதன்கிழமை பகல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு உணவருந்த சென்றார். அப்போது அவரது கடையிலிருந்து கரும்புகை வருவதாக பக்கத்து கடைக்காரர்கள் நாகரத்தினத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கடை எரிந்து சேதம்
உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்து கரும்புகை வந்ததால் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதபாளையம், புகலூர், நாமக்கல் ஆகிய மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் கடையைத் திறந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால் கடையில் இருந்த கண் பரிசோதனை இயந்திரம், கண் கண்ணாடிகள் என சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
மின்கசிவு காரணம்
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர், போலீசார் நடத்திய சோதனையில் மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.