தூசூர் ஏரிக்கரையில் புதிய பாலம் அமைக்கும் பணி : நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
தூசூர் ஏரிக்கரையில் புதிய பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
தூசூர் ஏரிக்கரையில் புதிய பாலம் அமைக்கும் பணியை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, துறையூர் ரோடு ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை செல்லும் நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையொட்டி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் (யுடிஎம்) திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, சேந்தமங்கலம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் முதற்கட்டமாக 9.20 கி.மீ தூரத்திற்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கடின புருவங்களுடன் கூடிய இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியில் தற்சமயம் தடுப்புச் சுவர் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல், சாலை அகலப்படுத்தும் பணிகள் மற்றும் தூசூர் கடக்கால் பகுதியில் உள்ள பழைய தாம்போக்கி பாலத்திற்கு பதிலாக உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியினை. சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் சசிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அகலப்படுத்தப்படும் சாலை பகுதியின் தள அடர்த்தி, ஜல்லி கலவையின் விகிதங்கள் மற்றும் பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சாலைப்பணிகளை, தரமாகவும், காலதாமதமின்றி விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சுரேஷ்குமார், உதவிப்பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.