பீஹார் முதல்வரை அழைத்து வந்து தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு : கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்
விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், பீஹார் முதல்வரை அழைத்துவந்து தமிழகத்தில், மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.;
நாமக்கல்லில் நடைபெற்ற காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கில், தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசினார்.
நாமக்கல்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காவிரி மற்றும் கள் உரிமை மீட்பு கருத்தரங்கு நாமக்கல்லில் நடைபெற்றது. நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
கர்நாடகா அரசு, தமிழகத்தையும், புதுச்சேரியையும் வடிகால் என நினைத்து, காவிரியில் வெள்ளம் வரும்போது மட்டுமே தண்ணீரை வழங்குகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கக் கூடிய நீரை வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பை கூட கர்நாடகா அரசு மதிக்க வில்லை. காவிரி நீர் குறித்து தமிழக மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் விழிப்புணர்வு இல்லை. காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, தினமும் நீர் பங்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் டெல்டா பகுதியில் முறையாக விவசாயம் செய்ய முடியும்.
தமிழக அரசு, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி நதி நீர் பங்கீடு குறித்து, காவிரி நடுவர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு அளிக்க வேண்டும். மனுவை ஏற்றுக்கொண்டால் வரவேற்போம், இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட் செல்வோம். அங்கும் நீதி கிடைக்க வில்லை என்றால், 40 தமிழக எம்.பி.,க்களைக் கொண்டு லோக்சபாவை முடக்க வேண்டும். சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள், கள்ளுக்கான தடை குறித்து பேச வேண்டும். அவ்வாறு பேசவில்லை என்றால், அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருக்க வாய்ப்பில்லை. கள்ளில் கலப்படம் இருப்பதாக அரசு கூறுகின்றது. நாங்கள் கொண்டு வந்துள்ள கள் கலப்படம் என நிரூபித்தால், சிறைச்சாலைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு, தமிழக அரசு நிதி வழங்குகிறது. ஒழிக்கப்பட வேண்டியது போதைப் பொருட்கள், தவிர்க்கப்பட வேண்டியது மது, தடை செய்யக்கூடாதது கள். விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை தமிழகத்திற்கு அழைத்து வந்து, மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டிற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும், இந்த மாநாடு, 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.