நெல்லையில் இளைஞர்கள் மீது நிர்வாண தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நெல்லையில் இளைஞர்கள் மீது நிர்வாண தாக்குதல் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் கஞ்சா போதையில் பட்டியலின இளைஞர்கள் இருவரை, நேற்று முன்தினம் ஆற்றுப்பகுதியில் மது அருந்திக்கொண்டு கஞ்சா போதையில் இருந்த ஆறு பேர் கும்பல், பட்டியலின இளைஞர்கள் இருவரை சாதியை கேட்டு தெரிந்து கொண்டு, மாலை முதல் நள்ளிரவு வரை தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்களை நிர்வாணப்படுத்தியும், சிறுநீர் கழித்தும் தாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொன்மணி (வயது 25), நல்லமுத்து (வயது 21), ஆயிரம் (வயது 19), ராமர் (வயது 22), சிவா (வயது 22), லட்சுமணன் (வயது 20), ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது. இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.