புதிய தலைமைச் செயலாளர்... யார் இந்த முருகானந்தம்?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
ஓராண்டுக்கு மேலாகத் தமிழக அரசின் தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா இருந்தார். அவர் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு முதல்வரின் தனிச் செயலராக இருந்து வந்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
"முருகானந்தம் 1991-யை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டம் பெற்றிருக்கிறார். திருநெல்வேலியில் சார் ஆட்சியர், கோவை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை, போக்குவரத்துத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, நிதித் துறைகளின் செயலாளர், தொழில்துறையின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் நிதித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். பிறகு கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் முதல்வரின் தனிப் பிரிவுச் செயலர் பணியிலிருந்தார். இந்த சூழலில்தான் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். முன்னதாக கட்டடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை தொடங்கியது.
இந்த ஆணையத்தின் முதல் தலைவராக 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் கடந்த பிப்ரவரியில் முடிவடைந்தது. இந்நிலையில், புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் படி தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மறுபக்கம் முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்".
இதையடுத்து முருகானந்தத்துக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது என்கிற கேள்வியுடன் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் கூறியதாவது: "தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்தார், சிவ்தாஸ் மீனா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் பட்டியலில் இருந்தார். பிறகு மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு சிவ்தாஸ் மீனா மீண்டும் மாநில அரசுப் பணிக்கு வந்தார். ஸ்டாலின் குட் புக்கில் இடம்பெற்றதால் தலைமைச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில் முருகானந்தத்துக்கு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிவதாஸ் மீனாவுக்கும் இதில் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதாவது தற்போதைய பதவியிலேயே சிவதாஸ் மீனா இருந்தால் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால், 62 வயது வரையில் சிவ்தாஸ் மீனா பணியாற்ற முடியும். அதாவது ஆணையத்தில் பணியாற்றுவோருக்கு ஓய்வு பெரும் வயது 62 ஆகும். எனவே தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது" என்றனர்.