முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
புதுக்கோட்டைமாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பரிசளித்தனர்.;
புதுக்கோட்டைமாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பரிசளித்தனர்.
புதுக்கோட்டை கற்பகவிநாயகா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் , மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 7,616 பங்கேற்பாளர்கள் பங்கேற்று விளையாடியதில் 1,470 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,000 மும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,000 மும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,000 மும் என மொத்தம் ரூ.30,14,000 மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
மேலும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 630 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1,00,000 மும், இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75,000 மும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50,000 மும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சரின் கோப்பைக்கான 12 விளையாட்டுகளில் 5 பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இன்றையதினம் பரிசுகள் வழங்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றும் வகையில் பல்வேறு வகையான உலக அளவில் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நமது வீரர், வீராங்கனைகளிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மேலும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தி வருகிறது.
எனவே இன்றையகால இளைஞர்கள் அனைவரும் படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி தமிழக அரசால் மாவட்டந்தோறம் நடத்தப்பட்டுவரும் மாண்புமிகு முதலமைச்சரின் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர்விளையாட்டுத் துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக மாவட்ட மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் நடைபெறும் என அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்தார்கள். அதன்படி நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட 44வது ஒலிம்பியாட் போட்டி உலகமே வியந்து பார்க்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கப்பட்டது. மேலும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்து விளங்கும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு, விளையாட்டுகளில் வெற்றிபெறும் நபர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே நாம் அனைவரும் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துவதன் மூலம் சுறுசுறுப்பு ஏற்படுவதுடன், உடல் உறுதியும் மேம்படுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் மாநில அளவில் வெற்றிபெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.