தமிழகத்தில் இன்று முதல் பருவமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, 15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:
இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் விலக உள்ளது. இந்தநிலை யில், தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு, வடகிழக்குதிசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கத்தால், தென்னிந்திய பகுதி களில் வடகிழக்கு பருவமழை வரும் 15 அல்லது 16-ம் தேதி தொடங்கக் கூடும். சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை. வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் களமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறினார்.