எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்
வரும் புதன்கிழமை வரை விண்ணப்ப அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 10) நிறைவடையவிருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,127 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,249 பேரும் என மொத்தம் 35,376 போ் இதுவரை விண்ணப்பித்துள்ளனா். வரும் 12-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து கலந்தாய்வைத் தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களே அகில இந்திய அளவில் அதிகளவில் முதலிடம் பெற்றுள்ளனர். பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்னும் இரண்டு நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் உள்ள நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாற்பது ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.