தரங்கம்பாடி அருகே மர்மமான முறையில் இளைஞர் மரணம்- உறவினர்கள் ஆவேசம்
தரங்கம்பாடி அருகே, செம்பனார்கோவிலில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில், ஐயப்பன் ஹோட்டல் கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை, வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன் (22) என்பவர் இரண்டு மாதங்களாக சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 21-ஆம் தேதி இரவுமுதல், அரவிந்தனை காணவில்லை என, அவரது குடும்பத்தினருக்கு, அங்கு வேலை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையெ, அலுவலக மாடியில் துர்நாற்றம் வீசுவதாக அங்கு வேலை பார்த்தவர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது அலுவலக மாடியில் அரவிந்தன் இறந்த கிடந்துள்ளார். அவர் அருகில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் காலி விஷ மருந்து 2 பாட்டில்கள் கிடந்தன.
அரவிந்தன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, உறவினர்கள் 300க்கு மேற்பட்டோர், அங்கு திரண்டதால் பதட்டமான சூழல் நிலவியது. மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் மயிலாடுதுறை, செம்பனார்கோயில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அலுவலக உரிமையாளர் அன்பழகனை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீசார், உரிமையாளர் அன்பழகன் உள்ளிட்ட 12 பேரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவிந்தனின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.