சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத பெண்மணிகள் வினோத வழிபாடு

மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் 195 வது ஆண்டு பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் நடைபெற்றது

Update: 2024-05-07 15:09 GMT

சிவனடியார்களிடம் மடிப்பிச்சை வாங்கும் பெண்கள் - கோப்புப்படம் 

சிவனடியார்களில் ஒருவரான சிறுதொண்டர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவு அளித்த பிறகே, தான் உணவருந்தும் பழக்கத்தை கொண்டு இருந்தார். அவரது இந்த தொண்டை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒருநாள் அவரது வீட்டிற்கு சிவனடியாராக வந்து அவரிடம் இன்று உனது இல்லத்தில் உணவு அருந்த இருப்பதாக கூறுகிறார்.

அவரது எண்ணத்தை அறிந்து அவருக்கு பிடித்த உணவை சமைக்க எண்ணிய சிறுதொண்டர், அவருக்கு என்ன பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு சிவனடியாராக வந்த சிவபெருமானோ தனக்கு பிள்ளைக்கறி வேண்டும் என கூறியுள்ளார். சிறுதொண்டரோ அவரது விரும்பத்தை நிறைவேற்றும் வகையில், தனது ஒரே மகனான சீராளனை கொன்று பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாருக்கு அமுது படையல் அளிக்க ஆயத்தமாக இருந்துள்ளார்.

அந்த வேளையில் சிவனடியார் குளித்து பூஜை செய்து முடித்து விட்டு, இல்லத்தில் உள்ள அனைவரையும் வரச் சொன்ன போது சிறுதொண்டரும், அவரது மனைவியும் மட்டும் வந்துள்ளனர். சிவனடியாரோ எங்கே உன் குழந்தைகள் என கேட்க, இருவரும் செய்தறியாமல் தவித்துள்ளனர். அப்போது குழந்தை இல்லாத வீட்டில் நான் உணவு அருந்த மாட்டேன் என சிவனடியாராக வந்த சிவபெருமான் மறுத்துள்ளார்.

சிறுதொண்டரோ எங்கே சிவனடியார் தன் இல்லத்தில் உணவருந்தாமல் சென்று விடுவாரோ என அஞ்சி தனது ஒரே மகன் சீராளனை, தங்களுக்காக கொன்று சமைத்துள்ள உண்மையை கூறுகிறார். அப்போது சிவனடியார் உன் மகனது பெயரை சொல்லி வாசலில் நின்று மும்முறை கூப்பிடச் சொல்கிறார்.

அவ்வாறே அழைக்கும் போது அவரது மகன் சீராளான் உயிருடன் ஓடி வருவதைக் கணவன், மனைவி இருவரும் கண்டு ஆனந்தம் அடைந்தனர். பின் தங்கள் இல்லத்திற்கு சிவனடியாராக வந்தது சிவபெருமானே என உணர்ந்து மெய்சிலிர்த்து போயினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு இன்று பரணி நட்சத்திரத்தில் 195வது அமுது படையல் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு உத்தராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து துறவிகள் பலர் கலந்து கொண்டு சுவாமிக்கு அமுது படையல் இட்டனர் இதில் கலந்துகொண்டு வரிசையாக அமர்ந்திருந்த சிவனடியார்களிடம் மண்டியிட்டபடி மடிப்புச்சை வாங்கி அந்த உணவை உண்டால் குழந்தை பாக்கியம் நோயில்லா வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என கூறப்படுகிறது .

ஏராளமான பெண்கள் மடிப்பிச்சை வாங்கி வினோத வழிபாடு மேற்கொண்டனர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தராபதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News