மயிலாடுதுறை அருகே நாகங்குடி மகளிர் சுய உதவி குழு சிறிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்கள் நீண்ட நேரம் வெயிலில் நின்று வாக்களித்தனர். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
மயிலாடுதுறை தொகுதி வள்ளாலகரம் ஊராட்சி நாகங்குடியில் அமைந்துள்ள 115வது வாக்குச்சாவடியில் மகளிர் வாக்களிக்க மகளிர் சுய உதவி குழுவின் சிறிய கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் வாக்களிக்க கட்டிடத்தின் முன்னே சிறிய அளவில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் வாக்காளர்கள் எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாமல் நீண்ட நேரம் வெயிலில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இரண்டு பெண்கள் மயக்கமடைந்து விழுந்து விட்டதாகவும் வாக்காளர்கள் குற்றம்சாட்டினர். மேலும் அந்தப் பகுதியில் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இப்பகுதியில் தேர்தல் அலுவலர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.