மயிலாடுதுறை இளம்பெண் கணவர் மீது கோட்டாட்சியரிடம் பகீர் புகார்
நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தியதாக கணவர் மீது இளம்பெண் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் அபிநயா(20). இவர் பள்ளியில் படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரேம்குமார்(32) என்பவரைக் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு அபிநயா மீண்டும் 12-ஆம் வகுப்பு பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து முடித்துள்ளார். திருமணத்தின்போது அபிநயாவின் பெற்றோர் 30 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சத்துக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். ஆனால், கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவர் பிரேம்குமார், மாமியார் மஞ்சுளா மற்றும் பிரேம்குமாரின் சகோதரர் ஆகியோர் அபிநயாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் பிரேம்குமார் தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவந்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அபிநயாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு உடன்படாத அபிநயா அங்கிருந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து மணல்மேடு காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபிநயா புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கணவர் பிரேம்குமார் திருமணத்துக்குப்பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், பிறருடன் தவறாக நடந்து கொள்ள வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்ட நிலையில், தன்னிடம் இருந்து பெற்ற வரதட்சணை பொருள்களை திருப்பித் தரவில்லை. மேலும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுத்து தனது பொருட்களை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.