மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞர் 24 மணி நேரத்தில் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2021-12-12 14:46 GMT

கைது செய்யப்பட்ட வீரபாண்டி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுக்குட்டி மகன் வீரபாண்டி(28). வெளிநாட்டில் வேலைபார்த்து சொந்த ஊருக்கு வந்த இவர் மீண்டும் வெளிநாடு செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்துக்கு வந்த வீரபாண்டி, அங்கு நிலவிய கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மணல்மேடு செல்லும் பேருந்தில் ஏற முயன்ற உச்சிதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆழ்வார் மனைவி சங்கீதா (35) என்பவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால், சங்கீதா சுதாரித்துக் கொண்டு சத்தமிட்டதால் வீரபாண்டி அங்கிருந்து ஓடி தப்பினார்.

இதுகுறித்து, சங்கீதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வீரபாண்டி அங்கிருந்து ஓடி தொலைவில் நிறுத்திவைத்திருந்த அவரது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவுப்படி, துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் தப்பிச்சென்ற வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்ட வீரபாண்டியை கண்டறிந்த காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார்  வீரபாண்டியின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்.

போட் மெக்கானிக்கான வீரபாண்டி  சிங்கப்பூர் செல்வதற்காக இருந்த நிலையில், தனது விபரீத எண்ணத்தின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News