ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் மூவலூர் ஊராட்சி உள்ளது. ஆயவலம், மகாதானபுரம் மற்றும் மூவலூர் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூவலூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், சேதமடைந்த அக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான கட்டுமானப் பணிகள் மகாதானபுரம் கிராமத்தில் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே அமைந்துள்ள போக்குவரத்து நிறைந்த மூவலூர் பகுதியிலேயே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக புதிய கட்டிடம் அமைக்கும் பணி நிறுத்தப்படுவதாகவும், வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.