ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வோம்: கிராமமக்கள் உறுதி
ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல விதித்த தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்;
மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இவ்வாதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று தருமபுரம் ஆதீனகர்த்தர் பட்டணப்பிரவேசம் மேற்கொள்வார். ஆதீனகர்த்தரை சொக்கநாத பெருமானாக பாவித்து பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிச் செல்வது வழக்கம்.
பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து வணங்கி வழிபாடு மேற்கொள்வர். பின்னர் ஆதீனகர்த்தர் கொலுபீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இந்த பாரம்பரிய ஆன்மீக மரபுகள் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் பட்டணபிரவேச நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை (ஆதீனகர்த்தரை) பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் பட்டணப்பிரவேச நிகழ்ச்சியை தடை செய் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் கேட்டுகொண்டார்.
அதன்பேரில் பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு, மதுரை ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் ஆகிய ஆதீனகர்த்தர்கள், ஆன்மிக அமைப்பினர் இந்த தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தருமபுரம் ஆதீன திருமடத்தின் நுழைவுவாயில் முன்பு திரண்ட தருமபுரம், மூங்கில்தோட்டம், முளப்பாக்கம் கிராமத்தினர் பட்டணபிரவேசத்தில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமரவைத்து தூக்குவதற்கு தடைவிதித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், தடை உத்தரவை திரும்பபெற வலியுறுத்தியும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குருமகா சந்நிதானத்தை சாதாரண மனிதரோடு ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், எத்தனை தடைகள் வந்தாலும் பட்டணப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம் என்று கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.