மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே கிராம மக்கள் குடிநீர், மின்சாரம் இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்த குடி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்வதால் ஆனந்தகுடி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குறைந்த மின் அழுத்தும் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் மின்சாரம் முழுமையாக இல்லாததால் பொதுமக்கள் மின்சார வசதி, குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வந்து உள்ளனர். அதிகாரிகளுக்கு பலமுறை தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், மயிலாடுதுறை - காளி சாலையில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிப்பு அடைந்தது. பள்ளி மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.