மயிலாடுதுறையில் தொடர் மழையால் பயன்பாடற்ற காவல் நிலைய சுவர் இடிந்தது
மயிலாடுதுறையில் பயன்பாடற்ற போலீஸ் நிலைய சுவர் பலத்த மழையினால் இடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை நகரில் கூறைநாடு பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த காவல் நிலையம் சிதிலமடைந்ததால் கடந்த 2000ம் ஆண்டு அதன் அருகிலேயே புதிய காவல் நிலையம் கட்டப்பட்டது. டி.எஸ்.பி. அலுவலகம், மயிலாடுதுறை காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில் பருவமழை காரணமாக காவல் நிலைய பழைய ஓட்டு கட்டிடம் சிதிலமடைந்து வந்தது. மரங்கள் மக்கி கட்டிடத்தின் மேல் விழுந்து வந்ததால் கட்டிடம் சிதலமடைந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது.
அவ்வப்போது கட்டிடம் இடிந்து வந்தது. பழைய காவல் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு பயனுள்ள கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வட கிழக்குப் பருவ மழை காரணமாக மயிலாடுதுறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று காலை பழைய காவல் நிலைய கட்டிட பத்தடி உயரமுள்ள சுவர் இடிந்து சாலையில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சிதிலமடைந்து வரும் பழைய காவல் நிலைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு காவல்துறைக்கே பயனுள்ள கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று காவலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.