மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனம் - வேன் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் எதிரே வந்த வேன் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.
மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் எதிரே வந்த வேன் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு. குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் மணக்குளம் பகுதியில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு உயர்ரக இருசக்கர வாகனம் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த அபினாஷ்(22) என்பவர் தனது நண்பர் கிருபாகரன்(23) என்பவருடன் உயர்ரக இருசக்கர (பஜாஜ் Rx200) வாகனத்தில் கும்பகோணம் நோக்கி செல்லும் போது மணக்குளம் அருகே லேசான வளைவில் அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த டெம்போ டிராவலர் வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. டெம்போ வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. வேனை ஓட்டி வந்த வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அபினாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அபினாஷ் உடலை மீட்டு 108 வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிகிச்சைக்காக கிருபாகரன் என்பவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே கிருபாகரன் உயிரிழந்தார். இருவரது உடலும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.