மயிலாடுதுறையில் துலா உற்சவம்: தீர்த்தவாரிக்கு புறப்பட்ட உற்சவ மூர்த்திகள்

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் துலா உற்சவம் மிகப் பிரசித்தி பெற்ற உற்சவமாகும்.;

Update: 2021-11-12 02:12 GMT

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உற்சவத்தை முன்னிட்டு சைவ, வைணவ ஆலயங்களில் இருந்து காவிரி துலாக்கட்டத்துக்கு தீர்த்தவாரிக்கு உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் துலா உற்சவம் மிகப் பிரசித்தி பெற்ற உற்சவமாகும். கங்கை முதலான புண்ணிய நதிகள் பக்தர்கள் புனிதநீராடுவதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் அதிகரித்து கருமை நிறம் அடைந்ததாகவும், அதனைப் போக்கிக்கொள்ள சிவபெருமானிடம் வேண்டியபோது, மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனிதநீராடி விமோச்சனம் பெற அருளியதாகவும், அதன்படி கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஐப்பசி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடுவது வழக்கம். அப்போது, மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சைவ ஆலயங்கள், வைணவ ஆலயமான பரிமள ரெங்கநாதர் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் காவிரிக்கரையில் எழுந்தருள்வர். அவ்வகையில் இன்று துலா உத்ஸவத்தில் தீர்த்தவாரியில் பங்கேற்ற மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனம் குமரக்கட்டளைக்குச் சொந்தமான 63 நாயன்மார்கள் துலாக்கட்ட காவிரிக்கு புறப்பாடு செய்ய எழுந்தருளினர். 63 நாயன்மார்கள் புறப்பாடு வருடத்தில் ஒருமுறை மட்டுமே உற்சவம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் இருந்து உத்ஸவ மூர்த்திகள் சுகந்தவனநாதர் துலாக்கட்ட காவிரி நாலுகால் மண்டபத்துக்கு தீர்த்தவாரிக்காக மங்களகிரி வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் வீடுகள் முன்பு தீபாராதனை எடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News