மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி சிவாலயங்களில் கொடியேற்றம்

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி சிவாலயங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடந்தது.

Update: 2021-11-07 11:16 GMT

துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை சிவாலயத்தில் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஐப்பசி 1ம்தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் இன்று திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. மாயூரநாதர் ஆலயத்தில் கெளரிஅபயாம்பிகை சமேத மாயூரநாதர், விநாயகர், தெய்வானை உடனாகிய சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதின கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்யதனர்.

இதேபோல் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமியுடன் வீதியுலாவாக எடுத்துவரப்பட்ட கொடி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள பத்துநாள் உற்சவமாக மாயூரநாதர் ஆலயத்தில் வருகின்ற 11ம்தேதி மயிலம்மன்பூஜை, 13ம்தேதி திருக்கல்யாணம், 15ம்தேதி திருத்தேர், நடைபெற்று 16ம்தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1ம்தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News