மயிலாடுதுறை: சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களில் மலர் அஞ்சலி
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட தரங்கம்பாடி, சந்திரபாடி, மாணிக்கபங்கு, சின்னமேடு, வானகிரி, பூம்புகார், புதுக்குப்பம் ஆகிய கடலோர பகுதி மீனவ கிராமங்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக 17 -ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தரங்கம்பாடி, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, பூம்புகார் கடற்கரையில் இருந்து சுனாமியால் உயிரிழந்தவர்களின் சமாதிக்கு மௌன ஊர்வலம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்தப் பேரணியில், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி. என். ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் பால.அருள்செல்வன் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், மீனவ பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.