தரங்கம்பாடி மீனவ கிராம சுனாமி நினைவிடத்தில் ஆட்சியர் மலர் அஞ்சலி
தரங்கம்பாடி மீனவ கிராம சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா மலர் அஞ்சலி செலுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழி பேரலை சுனாமியில் 315 பேர் உயிரிழந்தனர். இவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உயிரிழந்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும், ஊர்வலமாக சென்று நினைவு ஸ்தூபியில் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தரங்கம்பாடியில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் அப்பொழுது தரங்கம்பாடி மீனவர்கள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.