மயிலாடுதுறை: கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மயிலாடுதுறை ரயிலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி வடக்கு தாராநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் (25), இவரது மனைவி சத்யா (20), இவர்களது உறவினர் தியாகராஜன் மகன் சரபேஸ்வரன்(19) ஆகிய 3 பேர் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற போது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை பெற்ற மயிலாடுதுறை ரயில்வே காவல் ஆய்வாளர் சாந்தி திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, சிவக்குமார், சத்யா, சரபேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.