மயிலாடுதுறை அருகே அரசு கல்லூரியில் 4 மின்விசிறிகள் திருட்டு
மயிலாடுதுறை அருகே அரசு கல்லூரியில் 4 மின்விசிறிகள் திருட்டு போனதால் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வகுப்பறையில் இருந்த 4 மின் விசிறிகளை மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மணல்மேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் வாட்ச்மேன் இருந்தும் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் இக்கல்லூரியில் இரண்டாவது முறை நடைபெறுவதாகவும் முறையான சி.சி.டி.வி. வசதி மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாகவே திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி அருகே நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.