கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் அவதி. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2021-04-14 15:46 GMT

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை ஒவ்வொருவரும் இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசியை போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தினந்தோறும் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட வந்தவர்களை தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசியும் இருப்பு இல்லை என்றும் இரண்டு நாட்கள் கழித்து வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இரண்டாம் கட்டமாக வரும் பயனாளிகளுக்கு கோவீஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. உடனடியாக கோவிட்-19 தடுப்பூசிகளை அதிக அளவில் இருப்பு வைத்து பொதுமக்களை அலைக்கழிக்காமல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News